டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் குடியிருப்பில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வசித்து வருகிறார். ஆனால் அவரின் வீடு காலியாக இருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் புதிதாக தேர்வான உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றம் சார்பில் வீடு ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வீடுகளில் இருந்து எம்.பி.க்கள் தமக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்வர். அதற்கான காலி வீடுகள் பற்றிய பட்டியல் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் ராகுல் தற்போது வசித்து வரும் வீடு காலியாக உள்ளது. அங்கு யாரும் வசிக்கவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ராகுல் வயநாடு தொகுதியில் வென்ற பிறகும் அந்த வீட்டிலேயே தொடர்ந்து வசித்து வரும் நிலையில் அவருக்கான வீட்டில் அவர் இல்லை என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவரை வீட்டை காலி செய்ய வைக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக தொண்டர்கள் கூறி வருகின்றனர்.