விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் பங்களிப்புக்கு அனுமதியளித்த மத்திய அரசின் முடிவு குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவைச் சீர்செய்யும் வகையில் கடந்த மாதம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவித்தார். அப்போது, செயற்கைக்கோள் தயாரிப்பு, ஏவுதல் உள்ளிட்டவற்றில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கவும், விண்வெளி ஆய்வு, விண்வெளிப் பயணம் உள்ளிட்டவற்றைத் தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்படும் என அறிவித்தார். மேலும், இஸ்ரோ அமைப்பின் உள்கட்டமைப்பு வசதிகளைத் தனியார் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்பு எழுந்து வந்த சூழலில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள இஸ்ரோ தலைவர் சிவன், "விண்வெளித் துறை தனியார் நிறுவனங்களுக்குத் திறக்கப்பட்டால், விண்வெளி தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெற்றிட முழு நாட்டின் திறனையும் பயன்படுத்தலாம். இது துறையின் விரைவான வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, உலக விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியத் தொழில்துறை முக்கியப் பங்கு வகிக்க உதவும். இதன் மூலம், தொழில்நுட்பத் துறையில் பெரிய அளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கும், உலகளாவிய தொழில்நுட்ப சக்தியாக இந்தியா மாறுவதற்குமான வாய்ப்பு உள்ளது.
விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் செயல்பாடுகளை அனுமதிப்பது மற்றும் ஒழுங்குபடுத்துவது தொடர்பாகச் சுயாதீனமான முடிவுகளை எடுப்பதற்காக இந்திய தேசிய விண்வெளி, ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் என்ற ஒரு தன்னாட்சி அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் அங்கீகாரம் பெறும் நிறுவனங்களுடன் இஸ்ரோ அதன் தொழில்நுட்ப நிபுணத்துவத்தையும், வசதிகளையும் பகிர்ந்து கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.