இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. இந்தநிலையில், நேற்று (13.09.2021) இந்தியாவில் இதுவரை மக்களுக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 75 கோடியைத் தாண்டியது.
இந்தியாவில் முதல் 10 கோடி தடுப்பூசிகளை செலுத்த 85 நாட்கள் ஆன நிலையில், 65 கோடியிலிருந்து 75 கோடி வரையிலான 10 கோடி தடுப்பூசி டோஸ்களை செலுத்த 13 நாட்களே ஆனது. இதனையடுத்து உலக சுகாதார நிறுவனம் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தினுடைய தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் டாக்டர் பூனம் கெத்ரபால் சிங், "இதுவரை இல்லாத வகையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரித்ததற்காக உலக சுகாதார நிறுவனம் இந்தியாவை வாழ்த்துகிறது" என தெரிவித்துள்ளார்.