ஐதராபாத் நம்பள்ளியில் உள்ள மைதானத்தில் நுமாய்ஷ் என்ற பெயரில் நடந்த வர்த்தகக் கண்காட்சியில் இன்றிரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. பொருட்காட்சிக்கு வந்திருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்ததில் நெரிசலில் சிக்கி பலர் காயமடைந்தனர்.
தனியார் நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் கடைகள் என, அந்த மைதானத்தில் அரங்குகளை அமைத்திருந்தனர். இன்று மாலை ஏராளமான பொதுமக்கள், பொருட்காட்சியைப் பார்க்கவும், பொருட்களை வாங்கவும் வந்திருந்தனர். இந்த நிலையில், ஒரு ஸ்டாலில் மின்கசிவால் பற்றிய நெருப்புதான் பரவ ஆரம்பித்திருக்கிறது. அது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா அமைத்துள்ள அரங்காகும்.
பேகம் பஜார் காவல் நிலைய போலீசார் “தீ பற்றிய 20 நிமிடங்களுக்குள் அந்த மைதானத்தில் ஐந்தாறு சிலிண்டர்கள் வெடித்து தீ மிக வேகமாகப் பரவியது.” என்கிறார்கள்.
இந்த தீ விபத்தில் 150-க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் எரிந்து சாம்பலாகிவிட்டன. 50-க்கும் மேற்பட்டோர் தள்ளுமுள்ளுவில் சிக்கி காயமடைந்துள்ளனர். நெருப்புப் புகையால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட 7 பேரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தகவலறிந்து விரைந்த நம்பள்ளி தீயணைப்பு படையினர், எட்டு தீயணைப்பு வாகனங்களுடன் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.