மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திற்கு உட்பட்ட உல்லாஸ்நகர் காவல் நிலையத்திற்கு பாஜக எம்எல்ஏ கனபத் கெயிக்வாட், சிவசேனா ஷிண்டே பிரிவு முன்னாள் கவுன்சிலர் மகேஷ் கெய்க்வாட் இருவரும் வெவ்வேறு பிரச்சினைகளுக்காக புகாரளிக்க வந்துள்ளனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மகேஷ் கெய்க்வாட்டை, பாஜக எம்.எல்.ஏ. கணபத் கெயிக்வாட் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மகேஷ் கெய்க்வாட் உள்ளிட்ட 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மகேஷ் கெய்க்வாட்டின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாஜக எம்எல்ஏ ஒருவர் காவல் நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் பாஜக எம்எல்ஏ கன்பத் கெய்க்வாட் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கன்பத் கெய்க்வாட் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து தானே மாவட்ட போலீஸ் டி.சி.பி. சுதாகர் பதரே கூறுகையில், “ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற மூவரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஐபிசி மற்றும் ஆயுதச் சட்ட பிரிவுகளின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு மகாராஷ்டிரா துணை முதல்வரும், உள்துறை அமைச்சருமான தேவேந்திர ஃபட்னாவிஸ் உத்தரவிட்டுள்ளார்.