
கோவா யூனியன் பிரதேசம் ஷிர்காவோ பகுதியில் ஸ்ரீ லைராய் தேவி என்ற பிரசித்தி பெற்ற கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில், ஆண்டு தோறும் ஜத்ரா எனப்படும் திருவிழா நடைபெறும். பார்வதி தேவியின் ஒரு வடிவமாக நம்பப்படும் லைராய் தேவியை வணங்குவதற்காக மாநிலம் முழுவதில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த திருவிழாவுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு ஜத்ரா திருவிழா நேற்று தொடங்கியது. இந்த திருவிழாவையொட்டி, மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு குவிந்தனர். அப்போது பக்தர்கள் சரிவான பாதையில் சென்ற போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு கோவா மருத்துவக் கல்லூரி மற்றும் மாபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புகழ்பெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் சிக்கி பலியான சம்பவம் மாநிலத்தில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைப் பெற்று வரும் பக்தர்களைச் சந்தித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.