
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் துணை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு பால் ராஜப்பா என்பவர் போஸ்ட் மாஸ்டராகவும், பாலகிருஷ்ணன் மற்றும் ரேவதி ஆகிய இருவர் போஸ்ட்மேன்களாக பணியில் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று(2.5.2025) நண்பகல் நேரத்தில் கழுகுமலை காளவாசல் பஸ் ஸ்டாப் அருகே, மக்களுக்கு விநியோகிக்கப்பட வேண்டிய நூற்றுக்கணக்கான தபால்கள், பார்சல்கள் சாலையோரம் வீசி எறியப்பட்டு குப்பையோடு குப்பையாக கிடந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து தபால் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் இது குறித்த வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் கழுகுமலை தபால் நிலைய அதிகாரிகள் தரப்பிலிருந்து எந்த வித ரியாக்ஷனும் இல்லாமல் மெத்தனபோக்குடன் இருந்துள்ளனர். இதனிடையே சற்று நேரத்தில் அந்த தபால்கள் அனைத்தும் திடீரென தீக்கிரையாகி சாம்பலானது. இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக கழுகுமலை போஸ்ட் மாஸ்டர் பால் ராஜப்பாவை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, “சாலையோரத்தில் தபால்கள் வீசி எறியப்பட்டு கிடந்தது உண்மைதான். இது தொடர்பாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கழுகுமலை தபால் நிலையத்தில் பணியாற்றக்கூடிய போஸ்ட்மேன் பாலகிருஷ்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பகுதிகளில் விநியோகம் செய்யக்கூடிய தபால் என்பது முதற்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என சுருக்கமாக முடித்து கொண்டார்.
இந்நிலையில் போஸ்டல் டிபார்ட்மெண்ட் உயர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி போஸ்ட் மாஸ்டர் பால் ராஜப்பா, கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மாவதி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி