
மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தால் 4 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம், கோழிக்கோடு பகுதியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒன்று அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று (02-05-25) இரவு யு.பி.எஸ் பொருத்தப்பட்டிருந்த அறைக்குள் திடீரென்று மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த மின்கசிவினால் பயங்கர வெடிச்சத்தம் வந்து, பயங்கர புகைமூட்டம் கிளம்பியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர், மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், மின்கசிவினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 4 நோயாளிகள் மூச்சுத் திணறி பரிதாபமாக பலியாகினர். இதனையடுத்து சிகிச்சைப் பெற்று வந்த மற்ற நோயாளிகள் உடனடியாக வேறு அறைகளுக்கு மாற்றப்பட்டனர். இந்த தீ விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.