கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே பழக்கடை குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குமரன் நகர்ப் பகுதியில் முகமது மன்சூர் அவருடைய சகோதரருடன் இணைந்து பழங்களை மொத்தமாக விற்பனை செய்யும் குடோனை வைத்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை திடீரென அந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழக்கடையில் இருந்த பழங்கள் மற்றும் அதை பார்சல் செய்து அனுப்புவதற்கு வைக்கப்பட்டிருந்த பெட்டிகள், பேப்பர்கள் என அனைத்தும் எரிந்து நாசமானது.
தொடர்ந்து அந்தப் பகுதியில் கரும்புகை சூழ்ந்ததால் அந்தப் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். தகவலறிந்து பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் குமரன் நகர்ப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.