விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவரிக்கச் சென்றபோது பிரதமர் மோடி, “அவர்கள் எனக்காகவா உயிரிழந்தார்கள்” எனக் கேள்வி எழுப்பியதாக மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து இந்தியா முழுவதிலும் இருந்து விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு ஏறத்தாழ ஒருவருடமாக போராட்டம் நடத்தினர். இதில், ஏராளமான விவசாயிகள் மரணமடைந்தனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனப் பல்வேறு அரசியல் கட்சியினரும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மேகாலயா ஆளுநர் சத்தியபால் மாலிக் அண்மையில் பிரதமர் மோடியை சந்தித்துப்பேசியது குறித்தும், அப்போது மோடி விவசாயிகளின் மரணம் குறித்து மோடி தெரிவித்துள்ள கருத்தை வெளியிட்டிருப்பதும் அரசியலில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக் கிழமை மேகாலயா ஆளுநர் சத்தியபால் மாலிக், ஹரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது அங்கு அவர், “பிரதமர் மோடி மிகவும் திமிர் பிடித்தவர். நான் அவரிடம் நம்முடைய 500 விவசாயிகள் உயிரிழந்துள்ளார்கள்” என்று கூறினேன்.
அதற்குப் பதிலளித்த மோடி, “அவர்கள் அனைவரும் எனக்காகவா இறந்தார்கள்?'' என்றார். அதற்கு நான் ''நீங்கள்தான் இந்தியாவின் பிரதமர் எனக் கூறினேன். இறுதியாக நான் பிரதமரிடம் இந்த விவகாரம் தொடர்பாக வாக்குவாதம் செய்தேன். பின்னர், அவர் என்னிடம் அமித் ஷாவை சந்திக்குமாறு கூறினார். நான் அமித்ஷாவைச் சந்தித்து பேசியபோது, 'அவர் ஏதோ பேசிவிட்டார் விடுங்கள். தொடர்ந்து என்னைச் சந்தியுங்கள்'' என அமித்ஷா கூறியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மேகலாய ஆளுநர் சத்தியபால் மாலிக் இடையே வெறும் 5 நிமிடம் அந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. அதில் மோடி மேற்குறிப்பிட்டவாறு பேசியதாக சத்தியபால் மாலிக் தெரிவித்துள்ளார். இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் முக்கிய மாநில தேர்தலான உத்திரப் பிரதேசம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், ஆளுநர் இப்படி பேசியிருப்பது அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.