மக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார் சந்திரசேகர ராவ் என கூறிய நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநில பிரசார பொறுப்பாளராக விஜயசாந்தியை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய விஜயசாந்தி,
தெலுங்கானா மாநில மக்கள், தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி மேல் மதிப்பு வைத்து அவர்களை அரியணையில் அமர்த்தினார்கள். ஆனால் சந்திரசேகர ராவ் மக்களின் நம்பிக்கையை வீணடித்து விட்டார்.
தனி தெலுங்கானா மாநிலம் பெற்றுத்தந்த காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க மக்கள் ஆயத்தமாகி விட்டனர். நடைபெற உள்ள தெலுங்கானா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற தீவிர பிரசாரத்தில் ஈடுபடுவேன்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தேர்தலில் போட்டியிடுங்கள் என என்னிடம் தெரிவித்தார். ஆனால் நான் அதற்கு மறுப்பு தெரிவித்து, கட்சியை வலுப்படுத்துவதற்காக தேர்தல் பிரசார பொறுப்பாளராக நியமனம் செய்யுங்கள் என கூறினேன். அதன்படி தெலுங்கானா மாநில பிரசார பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளேன் என்று அவர் கூறினார்.
தெலங்கானா மாநில முதல் முதலமைச்சராக இருந்த சந்திரசேகராவ் கட்சியான ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்தவர் விஜயசாந்தி. ஆந்திராவின் மெதக் தொகுதி எம்.பி.யாக இருந்தார். சந்திரசேகரராவ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2014ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் விஜயசாந்தி. சந்திரசேகராவ் கட்சியை எதிர்கொள்ள அவரது கட்சியில் இருந்த விஜயசாந்தியே சரியான தேர்வு என்று கட்சியினரிடம் கூறியிருக்கிறார் ராகுல்.