அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 80.04 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஜூன் மாதம் 22- ஆம் தேதி அன்று அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூபாய் 78 ஆக இருந்த நிலையில், அது படிப்படியாக தற்போது வீழ்ச்சியடைந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.
இந்த ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக் காரணமாக, இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிக்கக்கூடும். குறிப்பாக, எரிபொருள் உள்ளிட்ட பொருட்களின் விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து, அதில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை தயாரித்து விநியோகம் செய்கிறது.
ஆகவே, கச்சா எண்ணெய் விலைக்கு கூடுதல் டாலர்கள் கொடுக்கும் சூழ்நிலை ஏற்கனவே இருக்கும் நிலையில், ஒவ்வொரு டாலருக்கும் கூடுதல் ரூபாய்களைக் கொடுக்க வேண்டிய சூழல் ஏற்படுவதால், எரிபொருள்களின் விலை மேலும் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளிலே படிக்கும் இந்திய மாணவர்கள் ஆகியோர்களுடைய செலவுகளும் அதிகரிக்கும்.
படிப்படியாகவும், வேகமாகவும் ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்கம் ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், இது மேலும் அதிகரிக்கும் எனப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.