ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிடப் போவதாக ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
பிஹார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் கூட்டணி ஆட்சி செய்து வருகின்றன. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும் இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் தேர்தல் வெற்றிக்கு பிறகு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு, ஒரு மத்திய அமைச்சர் பதவியை மட்டுமே தருவதாக பாஜக கூறியுள்ளது. ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாத நிதிஷ்குமார் கூடுதல் அமைச்சர் பதவிகள் கேட்டுள்ளார். ஆனால் பாஜக ஒரு அமைச்சர் பதவிதான் தர முடியும் என உறுதியாக இருந்ததால், நிதிஷ்குமார் அதிருப்தி அடைந்தார்.
இதனால், பாஜக வழங்குவதாக கூறிய ஒரு அமைச்சர் பதவியையும் வேணடும் என கூறினார். இந்நிலையில் விரைவில் பீகாரின் அண்டை மாநிலமான ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அதில் பாஜக வுடன் கூட்டணி இல்லாமல் ஐக்கிய ஜனதா தளம் தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் உரிய இடம் வழங்காத அதிருப்தி காரணமாகவே நிதிஷ்குமார் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அக்கட்சியின் ஜார்க்கண்ட மாநிலத் தலைவர் சல்கான் முர்மு கூறுகையில், "இந்த தேர்தலில் ஐக்கிய ஜனதா தளக் கட்சி தனித்தே போட்டியிடும். மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டிய அவசியமில்லை" என தெரிவித்துள்ளார். பிஹாரை போல ஜார்கண்ட் மாநிலத்திலும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு பெரிய வாக்குவங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.