தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் மகாராஷ்டிராவில் கடந்த 28ஆம் தேதி ஆட்சி அமைத்தது சிவசேனா. முதலமைச்சராக சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்றார். இதையடுத்து டிசம்பர் 3ஆம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியிருந்தார்.
இந்த நிலையில் மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் இன்று பெரும்பான்மையை நிரூபிப்பதாக கூறியிருந்தது சிவசேனா. மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தற்காலிக சபாநாயகராக தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் வல்சே பாட்டீல் நியமிக்கப்பட்டார். இதையடுத்து இன்று மதியம் சிவசேனா தனது ஆட்சிக்கு தேவையான பெரும்பான்மையை நிரூபித்தது.
சிவசேனாவைச் சேர்ந்த 56 எம்எல்ஏக்கள், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 54 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 44 எம்எல்ஏக்கள் மற்றும் இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் 15 பேர் என தங்களுக்கு 169 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது என்று சிவசேனா பெரும்பான்மையை நிரூபித்தது.
தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களுடன் தங்களது சிவசேனா எம்எல்ஏக்களும் சேர்ந்து 154 எம்எல்ஏக்கள் இருந்தபோதும், இதர கட்சிகள் மற்றும் சுயேட்சை எம்எல்ஏக்கள் 15 பேரை சிவசேனா இழுத்துள்ளது. மேலும் சில சுயேட்சை எம்எல்ஏக்களிடமும் பேசி வருகிறது.
போதிய உறுப்பினர்கள் இருந்தபோதும் ஏன் சுயேட்சைகளிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள் என்று மும்பை வட்டாரங்களில் விசாரித்தபோது, பாஜக எப்படியும் மூன்று கட்சிகளிடம் இருந்து அதிருப்தி எம்எல்ஏக்கள் வருவார்களா என்று காத்துக்கொண்டிருக்கிறது. அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என சிவசேனா கூட்டணி நினைக்கிறது. இருப்பினும் தங்களை மீறி தங்களது எம்எல்ஏக்கள் சென்றுவிட்டால், அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க போதுமான உறுப்பினர்கள் தேவை என்பதால் இப்போதே சுயேட்சை உறுப்பினர்கள் மற்றும் இதர கட்சி உறுப்பினர்களிடம் பேசி ஆதரவை தக்க வைத்துக்கொள்ள சிவசேனா கூட்டணி சுயேச்சை எம்எல்ஏக்களிடம் பேசி வருகிறது என்றனர்.