இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்தே பெகாசஸ் விவகாரம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடர்ந்து செயல்பட முடியாமல் முடங்கியுள்ளன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடுவதும், எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபடுவதும், அவை ஒத்திவைக்கப்படுவதுமாக இருந்து வருகிறது. இன்றும் நாடாளுமன்றத்தில் இதேநிலை நீடித்தது. மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சில எம்.பிக்கள் பதாகைகளையும் காகிதங்களைக் கிழித்து வீசியுள்ளனர். சபாநாயகர் இருக்கை அருகிலும் இந்த கிழிக்கப்பட்ட காகிதங்கள் விழுந்தன. இந்நிலையில் கிழிக்கப்பட்ட காகிதங்களை வீசியதற்காகவும், சபாநாயகரை அவமதித்தற்காகவும் குர்ஜீத் சிங் ஆஜ்லா, டி.என். பிரதாபன், மாணிக்கம் தாகூர், ரவ்னீத் சிங் பிட்டு, ஹிபி ஈடன், ஜோதிமணி சென்னிமலை, சப்தகிரி சங்கர் உலகா, வி வைத்திலிங்கம், ஏ.எம். ஆரிஃப் ஆகிய ஒன்பது பேரை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.