பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், கூட்டுறவு அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. ஏற்கனவே பட்ஜெட்டில் கூட்டுறவுக்குத் தனி அமைச்சகம் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்த நிலையில், தற்போது உருவாக்கப்பட்டுள்ள இந்த அமைச்சகத்திற்குப் புதிய அமைச்சர் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் புதிய அமைச்சகம் குறித்து அமைச்சரவை செயலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த, இந்த அமைச்சகம் ஒரு தனி நிர்வாக, சட்ட, கொள்கை கட்டமைப்பை வழங்கும். அடிமட்டம்வரை செல்லும் உண்மையான மக்கள் சார்ந்த இயக்கமாக கூட்டுறவு அமைப்பை ஆழப்படுத்த இது உதவும்" என கூறப்பட்டுள்ளது.
மேலும், "நம் நாட்டில், கூட்டுறவு அடிப்படையிலான பொருளாதார மேம்பாட்டு மாதிரி மிகவும் பொருத்தமானது. அங்கு ஒவ்வொரு உறுப்பினரும் பொறுப்புணர்வுடன் செயல்படுகிறார்கள். கூட்டுறவுத்துறையில் எளிதாக தொழில் செய்யவும், பன்முக மாநில கூட்டுறவு வளர்ச்சியை ஏற்படுத்தவும் கூட்டுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும்" எனவும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.