உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகம் மட்டுமல்லாது அந்தமான் தீவிலும் நேற்று வாக்குப்பதிவு நடந்தது. அதில் மிகவும் குறிப்பிடத் தகுந்த ஒன்றாக அந்தமான் தீவில் மிகவும் ஆபத்து நிறைந்த பகுதியாக கருதப்படுவது சென்டினல் மற்றும் சோம்பன் இன பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதியாகும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு அந்தமானில் வடக்கு சென்டினல் தீவு பகுதிக்குச் சென்ற 26 வயது மத போதகர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடியின மக்களால் அம்பு எய்து கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது .தற்போதுவரை அவரின் உடல் கண்டெடுக்கப்படவில்லை. சென்டினல் மக்கள் வெளி உலகத் தொடர்புக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்களை அணுகும் மக்களை அவர்கள் கொடூரமாக கொள்வது வழக்கம். வெளி உலக தொழில் நுட்பங்கள், வெளி மனிதர்களின் கலாச்சாரம் ஆகியவை எதுவும் தற்போது வரை சென்டினல் மக்களைச் சென்றடையவும் இல்லை. மீறி எடுத்துச் சென்றால் அந்த மக்கள் ஏற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை.
அடர்ந்த காட்டில் தனிமையாக வாழும் அந்தப் பழங்குடியின மக்களின் மக்கள் தொகையே 80 தான் என்று சொல்லப்படுகிறது. சென்டினல் போன்றே அந்தமானில் மற்றொரு பழங்குடியின இனக்குழுவும் உள்ளது. அதன் பெயர் சோம்பன். இந்தக் குழுவில் மொத்தம் 229 பேர் வசிக்கின்றனர். இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் சோம்பன் மக்களிடம் வாக்களிப்பதின் அவசியத்தை உணர்த்தியிருந்தனர். அவர்களுக்கு பயிற்சி கொடுத்து ஓட்டு போட வைக்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்த நிலையில், 229 பேரில் ஏழு சோம்பன் பழங்குடியின மக்கள் இந்தத் தேர்தலில் வாக்களித்தனர். இதனை வரலாற்றுச் சாதனை என இந்திய தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.