பொது சிவில் சட்டம் தொடர்பாக கருத்துக் கேட்புக்கான கால அவகாசத்தை சட்ட ஆணையம் நீட்டித்துள்ளது.
இந்தியா முழுவதும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பொதுமக்கள், அரசியல் கட்சிகள், சமூக மற்றும் மத அமைப்புகள் தம் கருத்துகளை ஜூலை 14 ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என்று 22வது சட்ட ஆணையம் அறிவித்து இருந்தது.
அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக தற்போது வரை சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கருத்து தெரிவித்து இருப்பதாக சட்ட ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு தரப்பில் இருந்தும் ஆன்லைன், கடித வடிவிலும் கருத்துகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர். இன்றுடன் (14.07.2023) கருத்துக் கேட்பு நிறைவடைய இருந்தது. இந்நிலையில் கருத்துகளை தெரிவிக்க மேலும் இரண்டு வார கால அவகாசத்தை சட்ட ஆணையம் அறிவித்துள்ளது. பொது சிவில் சட்டத்திற்கு பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.