ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி , 2004-2009 காலகட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த குற்றச்சாட்டை சிபிஐ விசாரித்து வருகிறது. இது தொடர்பான வழக்கில் ஜெகன் மோகன் ரெட்டி, கடந்த 2012 ஆம் ஆண்டு கைது செய்தது. இதன்பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு சிறப்பு சிபிஐ நீதிமன்றம் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நிபந்தனை பெயில் வழங்கியது.
இந்தநிலையில் ஜெகன்மோகன் ரெட்டி பெயில் விதிமுறைகளை மீறுவதாகவும், அவரது பெயிலை இரத்து செய்யவேண்டுமெனவும் ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கனுமுரி ரகுராம கிருஷ்ணம் ராஜு சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் மனுக்கள் மீதான விசாரணை நேற்று நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து ஜெகன் மோகன் ரெட்டியின் பெயிலை இரத்து செய்ய கோரும் மனுவின் மீதான தீர்ப்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் செப்டம்பர் 15 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஒருவேளை ஜெகன் மோகன் ரெட்டியின் பெயில் இரத்து செய்யப்பட்டு சிறைக்கு செல்ல நேரிட்டால், அவர் தனது முதல்வர் பதவியை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.