ராஜஸ்தானில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு ராகுல் காந்திதான் காரணம் என உமா பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. யார் முதல்வர்? எனும் போட்டியில் வெற்றிபெற்று அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றார். துணை முதல்வராக சச்சின் பைலட் பதவியேற்றார். பதவியேற்ற நாளிலிருந்தே இருவருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்தது. வெளியில் தெரியாமல் உள்கட்சி பூசலாக இருந்த வந்த இந்தப் பிரச்சனை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து 30 எம்.எல்.ஏ க்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறும் சச்சின் பைலட், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்துவந்த ஆதரவைத் திரும்பப்பெறுவார் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால் ராஜஸ்தான் மாநில அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில், இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் உமா பாரதி, "மத்தியப் பிரதேசத்தில் நடந்த சம்பவங்களுக்கும், ராஜஸ்தானில் தற்போது நடக்கும் குழப்பங்களுக்கும் ராகுல் காந்தியே பொறுப்பு. காங்கிரஸ் கட்சியில் இளம் தலைவர்கள் வளர்வதற்கு ராகுல் காந்தி அனுமதிக்கவில்லை. ஜோதிராதித்ய சிந்தியா, சச்சின் பைலட் போன்ற படித்த இளம் தலைவர்கள் உருவாகிவிட்டால் தாம் பின்னுக்குத் தள்ளப்படுவோம் என ராகுல் காந்தி அச்சப்படுகிறார்’’ எனக் கூறியுள்ளார்.