தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், கோவிட் பெருந்தொற்று காலத்தில் குடிமைப் பணித் தேர்வுகளை எழுத இயலாமல் போன தேர்வர்களுக்கு வயது வரம்பினை ஒரு முறை தளர்த்தும் நடவடிக்கையை மேற்கொள்ள வலியுறுத்தி உள்ளார்.
குடிமைப் பணித் தேர்வுகள் உட்பட ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட பல்வேறு ஆட்சேர்ப்புத் தேர்வுகளுக்கான வயது வரம்பை கோவிட் பெருந்தொற்று காலங்களில் தவறவிட்ட தேர்வர்கள், ஒரு முறை நடவடிக்கையாக தங்களின் வயது வரம்பை நீட்டிக்க வேண்டும் என்று கோரி வருவதைக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், போட்டித் தேர்வர்களது கோரிக்கையை கனிவுடன் பரிசீலிக்க கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், அனைத்து தேர்வர்களுக்கும் வயது தளர்வுடன் கூடுதல் முயற்சிக்கான வாய்ப்புகளை வழங்க நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் இதுபோன்ற அறிவுரைகள் வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வர்களின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளதையும் கடிதத்தில் தெரிவித்துள்ளார். தேர்வர்களுக்கு இத்தகைய ஒரு முறை தளர்வு வழங்குவதன் வாயிலாக அரசுக்கு எவ்வித நிதிச்சுமை ஏற்படாது என்றும், இது குடிமைப் பணி சேவையில் சேர விரும்பும் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பை வழங்கிடும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.