கரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலில், அவசர சேவைகளில் தாமதம் ஏற்படுவதைத் தடுக்க நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தைத் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது மத்திய அரசு.
உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏழை நாடுகள், வளர்ந்த நாடுகள் என வேறுபாடின்றி அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுள்ளது இந்த வைரஸ். அந்தவகையில் உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை 21 ஆயிரத்தைத் தாண்டியுள்ள சூழலில் இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஐ கடந்துள்ளது. கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும் 13 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் ஏப்ரல் 15 வரையிலான ஊரடங்கின் போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய தேவைகள் தாமதமின்றி கிடைப்பதை உறுதிசெய்யும் விதமாக, நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலையில் இருக்கும் சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரி, "கோவிட்-19 வைரஸ் பாதிப்பால் அவசர தேவைகளுக்காகச் செல்லும்போது சுங்கச்சாவடிகளில் நிற்கும்போது ஏற்படும் தாமதத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பது ரத்து செய்யப்படுகிறது. அவசர சேவைகளுக்கான நேரத்தையும் மிச்சப்படுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம் சுங்கச்சாவடிகளில் கிடைக்கும் அவசர சேவை போன்றவை வழக்கம் போல் கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.