உண்மையான எஜமானர்களாகிய மக்களை அணுகப் போவதாகப் பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கடந்த சில மாதங்கள் முன் தெரிவித்திருந்தார்.
இது குறித்து பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில், பங்களிக்க வேண்டும் என்பது தனது தாகம். மக்களுக்கு உகந்த கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதில் கடந்த 10 ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு மிகுந்த பாதையில் பயணிக்கிறேன். பிரச்சனைகளை நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக, மக்களை அணுக இருக்கிறேன்" என்று கூறியிருந்தார்.
இதன்மூலம் பிரசாந்த் கிஷோர், அரசியல் கட்சியைத் தொடங்கி நேரடி அரசியலில் ஈடுபடுகிறாரா என்றும் கேள்வி எழுந்தது.
காங்கிரஸ் கட்சியில் பிரசாந்த் கிஷோர் இணையும் திட்டம் தோல்வி அடைந்துள்ள நிலையில், முக்கியத்துவம் வாய்ந்த இந்த ட்விட்டர் பதிவு பல யூகங்களுக்கு வித்திட்டது.
இந்நிலையில் பீகாரில் உள்ள மேற்கு சாம்பரான் இடத்தில் இருந்து நடைபயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அரசியல் கட்சி துவங்கும் முன் அடிமட்டத்தில் உள்ள மக்களுடன் உரையாடி அவர்களின் பிரச்சனையை கண்டறியும் நோக்கத்துடன் 3500 கிலோமீட்டர் நடை பயணம் மேற்கொள்ள போவதாக அறிவித்துள்ளார். 1917 ல் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக மகாத்மா காந்தி தனது சத்தியாகிரக போராட்டத்தை அறிவித்த இடத்தில் இருந்து பிரசாந்த் கிஷோர் தனது நடைபயணத்தை துவங்கியுள்ளதாக குறிப்பிட்டார்.