முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், அதே முறைப்படி மீதமுள்ள 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். அதில் இலங்கையைச் சேர்ந்த 4 பேர் மட்டும் திருச்சி மத்திய சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விடுதலைக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட பல காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்ததோடு 'குற்றவாளிகளை நாட்டில் நடமாட விடக்கூடாது' என கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி பேசுகையில், ''அகில இந்திய காங்கிரஸ் கட்சியினுடைய பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷும், புதுச்சேரி மாநிலத்திலிருந்து நானும் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தோம். இந்த வழக்கில் மத்திய அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. ராஜீவ்காந்தியின் படுகொலையில் மத்திய அரசினுடைய நிலை என்ன என்பதை அவர்கள் குறிப்பிடாத காரணத்தாலும், அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநர் அதற்கு எந்த பதிலும் சொல்லாத காரணத்தாலும் ஆறு பேரும் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். பேரறிவாளனும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதை எதிர்த்து, மத்திய அரசு தன்னுடைய தவற்றை உணர்ந்து அந்த வழக்கில் மறுபரிசீலனை செய்யும்படி மறுசீராய்வு மனு போட வேண்டும் என நான் அறிக்கை விட்டிருந்தேன். இது சம்பந்தமாகக் கடிதமும் எழுதியிருந்தேன். இதற்கிடையில் நேற்றைய முன்தினம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசானது ராஜீவ்காந்தி படுகொலையில் ஏழு பேர் விடுதலை செய்தது தங்களுடைய கருத்துக்களைக் கேட்காமல் அது கூறப்பட்டிருக்கிறது. மத்திய அரசினுடைய விளக்கத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்கவில்லை. அது மட்டுமல்ல அதில் நான்கு பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில், தமிழக அரசுக்கு அவர்களை விடுதலை செய்வதற்கு அதிகாரம் கிடையாது. தமிழக அமைச்சரவை முடிவு செய்தாலும் கூட, அதை நீதிமன்றம் மத்திய அரசின் கருத்தைக் கேட்காமல் அவர்கள் நான்கு பேரையும் விடுதலை செய்தது. ஆனால் மத்திய அரசு அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை எனத் தெளிவாகக் கூறி மனுத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதற்கு மட்டும் மத்திய அரசுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அது மட்டுமல்ல தேவைப்பட்டால் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்களும் மறுசீராய்வு மனுவில் கலந்து கொள்வோம். ராஜீவ்காந்தியின் படுகொலை இந்த நாட்டை உலுக்கி இருக்கிறது. ஒரு நாட்டினுடைய பிரதமர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனால் சர்வ சாதாரணமாக அவர்கள் சிறையில் இருந்தார்கள். 30 ஆண்டுகள் சிறையில் இருந்தார்கள் என்ற காரணத்தைக் காட்டியும், சோனியா காந்தியும், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் மன்னித்துவிட்டார்கள் என்று சொல்லி அவர்களது விடுதலையை சில அரசியல் கட்சிகள் கொண்டாடுகின்றன. இது மிகப்பெரிய வருத்தத்தை எங்களுக்கு அளிக்கிறது. பல குற்றவாளிகள் பல்வேறு குற்றங்களுக்காக 40 ஆண்டுகளுக்கு மேலாகச் சிறையில் இருக்கிறார்கள். இவர்கள் 30 ஆண்டுகளாக சிறையில் இருந்துவிட்டார்கள் என்பதைக் காரணம் காட்டி வெளியே அனுப்புவது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது'' என்றார்.