ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், தலிபான்களுடன் பேச்சுவார்த்தை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் அழைப்பின் பேரில், இந்தியாவும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ளது. இந்தியா சார்பாக வெளியுறவுத்துறை இணை செயலாளர் ஜே.பி.சிங் தலைமையிலான குழு, இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுள்ளது.
இந்தநிலையில் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள இந்திய குழுவை, தலிபான் அரசின் துணை பிரதமர் அப்துல் சலாம் ஹனாபி தலைமையிலான குழு ஒன்று தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது. தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், இதனை தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் இந்திய அரசு, இந்த பேச்சுவார்த்தை குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த பேச்சுவார்த்தையின்போது, ஆப்கானிஸ்தானுக்கு மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாக இந்திய தரப்பு தெரிவித்ததாகவும் ஜபிஹுல்லா முஜாஹித் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு பற்றாக்குறையை போக்க, அந்தநாட்டிற்கு 50 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமையையும் அளிக்கவும், மருத்துவ உதவிகளை வழங்கவும் இந்தியா திட்டமிட்டு வருவதாக அண்மையில் தகவல் வெளியாகியிருந்தது இங்கு கவனிக்கத்தக்கது.
தற்போது நடைபெற்றுள்ள இந்த பேச்சுவார்த்தை, ஆப்கானில் தலிபான்கள் தங்களது இடைக்கால அரசை அமைத்த பிறகு, அந்த அமைப்புக்கும் இந்தியாவிற்கும் நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தையாகும். முன்னதாக ஆகஸ்ட் 31 ஆம் தேதி, ஆப்கானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பது தொடர்பாக இந்தியா தலிபான்களோடு பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.