உச்சநீதிமன்றம் பல முக்கிய வழக்குகளில் அடுத்தடுத்து தீர்ப்பளித்து வரும் நிலையில் இன்றும் நான்கு முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் முக்கிய வழக்கான ரபேல் மறுசீராய்வு மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்துடன் காங்கிரஸ் ஆட்சியில் 126 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதனை பாஜக அரசு ரத்து செய்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்தது.
இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, காங்கிரஸ் ஆட்சியில் ரஃபேல் விமானங்களை வாங்க ஆலோசிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் ரூ.58 ஆயிரம் கோடி அதிகமாக விலை வழங்கப்பட்டுள்ளதாகவும், விமான உதிரி பாகங்களைத் தயாரிப்பதற்கான ரூ.30,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தம், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியது.
இது தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழல் நடக்கவில்லை என தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் இன்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்ததோடு, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும் மறுத்துள்ளது.