உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில், இந்த இணைய இணைப்பின் பீட்டா வெர்ஷன் சேவையைப் பெற முன்பதிவு செய்யலாம் என ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
இதனையடுத்து இந்தியர்களும் ஸ்டார்லிங்க் இணைய இணைப்பிற்காக முன்பதிவு செய்தனர். இந்தநிலையில் மத்திய அரசு, இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமாக இணையச் சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங் உரிமம் வாங்கவில்லை எனவும், எனவே இந்தியர்கள் ஸ்டார்லிங்க் இணைய இணைப்பிற்காக முன் பதிவு செய்யவேண்டாம் எனவும் அறிவுறுத்தியது.
மேலும் இணைய இணைப்பிற்காக முன்பதிவு செய்திருந்த இந்தியர்களுக்கு, அவர்கள் செலுத்திய கட்டணத்தை திருப்பி அளிக்கவும் மத்திய அரசு ஸ்டார்லிங்க்கிற்கு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது ஸ்டார்லிங்க் நிறுவனம், இணைய இணைப்பிற்காக செலுத்தப்பட்ட கட்டணத்தை திருப்பி அளிப்பது தொடர்பாக இந்தியர்களுக்கு இ-மெயில் அனுப்ப தொடங்கியுள்ளது.
மேலும் ஸ்டார்லிங்க் தனது இ-மெயிலில், இந்தியாவில் செயல்படுவதற்கான உரிமங்களைப் பெறுவதற்கான காலவரை தற்போதைக்கு தெரியவில்லை என்றும், ஸ்டார்லிங்கை இந்தியாவில் செயல்படுவதற்கான அனுமதியை பெற உரிமக் கட்டமைப்பிற்குள் பல சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.