
உத்தரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில் உள்ள சட்டப்பேரவையில் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரப் பிரேதச நிதியமைச்சர் சுரேஷ் குமார் கன்னா, 2025-2026 ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
இந்த கூட்டத்தொடரின் போது, சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ ஒருவர் பான்மசாலா சாப்பிட்டு எச்சில் துப்பிய விவகாரம் பரபரப்பை எற்படுத்தியது. இது குறித்து, சபாநாயகர் சதீஷ் மஹானா தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அவர் கூறியதாவது, “நமது சட்டப்பேரவையில் பான் மசாலா சாப்பிட்டு ஒரு உறுப்பினர் எச்சில் துப்பியதாக எனக்கு தகவல் கிடைத்தது. எனவே, நான் இங்கு வந்து அதை சுத்தம் செய்தேன். வீடியோவில் எம்.எல்.ஏ.வைப் பார்த்திருக்கிறேன். ஆனால், நான் யாரையும் அவமானப்படுத்த விரும்பவில்லை. எனவே, நான் அவர்களின் பெயரைச் சொல்லவில்லை. சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. வந்து தாமாக முன் வந்து இதைச் செய்ததாகச் சொன்னால், அது நல்லது; இல்லையெனில், நான் சம்மன் அனுப்பி அவரை வரவழைப்பேன்” என்று கூறினார்.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் குட்கா, பான் மசாலாவுக்கு தடை விதித்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து சபாநாயகர் சதீஷ் மஹானா, “உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்தில் பான் மசாலா மற்றும் குட்கா பயன்பாடு உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் அல்லது பிற ஊழியர்கள் என எவரும் வளாகத்தில் புகையிலை பொருட்களை மென்று சாப்பிட்டால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.