கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. சிவசங்கரன் கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது.
திருவனந்தபுரத்தில் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரைப் பயன்படுத்தி, தங்கம் கடத்திய வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர், சரித் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்குத் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரிடம் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நான்காவது குற்றவாளியான சந்தீப் நாயர் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், ஸ்வப்னா கேரள அரசியல்வாதிகளுடனும் மூத்த அதிகாரிகளுடனும் நெருக்கமாகப் பழகியது தொடர்பான பல தகவல்கள் என்.ஐ.ஏ விசாரணையில் கண்டறியப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் முன்னாள் முதன்மைச் செயலாளர் சிவசங்கரனை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது. இதனையடுத்து அவரை எப்போது வேண்டுமானாலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம் எனத் தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் தாக்கல் செய்தார் சிவசங்கரன். இதில், அவரின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு, உயர்நீதிமன்றம் 23 -ஆம் தேதி வரை சிவசங்கரனை கைது செய்யத் தடை விதித்திருந்தது. இந்த நிலையில், கேரள உயர்நீதிமன்றத்தில் சிவசங்கர் தாக்கல் செய்த மற்றொரு முன்ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதன் மீது நடந்த விசாரணையில், முன்ஜாமீன் வழங்கப்படமாட்டாது என நீதிமன்றம் அறிவித்தது.
இதனையடுத்து, திருவனந்தபுரம் ஆயுர்வேத மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்டார். ஸ்வப்னா சுரேஷின் தங்கக் கடத்தலுக்கு வசதியாக, சிவசங்கரன் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்துக் கொடுத்திருந்ததாகவும், ஸ்வப்னா சுரேஷின் லாக்கரில் ரூ.1 கோடி இருப்பதாகவும் விசாரணையில் சிவசங்கரன் தெரிவித்ததாகத் தகவல் வெளியான நிலையில், தற்போது அவரது கைது இந்த வழக்கில் பரபரப்பு திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.