ரஜினிகாந்துக்கு ஜோடியாக லிங்கா படத்தில் நடித்தவர் சோனாக்ஷி சின்ஹா. இவர் பிரபல இந்தி நடிகர் சத்ருஹன் சின்ஹாவின் மகள்.
கடந்த ஆண்டு செம்ப்டம்பர் மாதத்தில் டெல்லியில் நடைப்பெற்ற இந்தியா பேஷன் மற்றும் பியூட்டி விருது நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நிகழ்ச்சி ஏற்பாட்டார்களிடம் 37 லட்சம் பெற்றுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட சோனாக்ஷி, கடைசி நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்க வர மறுத்துள்ளார்.

இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அதையும் சோனாக்ஷி தர மறுக்கவே, உத்தரபிரதேச மாநிலம் மொரதாபாத் காவல்நிலையத்தில் சோனாக்ஷி மீது புகார் அளித்தனர். இப்புகாரின் பேரில் சோனாக்ஷி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையின் முடிவில் சோனாக்ஷி கைது செய்யப்படுவதாக இருந்தது. அந்த நிலையில், தன்னை கைது செய்ய தடை விதிக்குமாறு அலகாபாத் நீதிமன்றத்தில் சோனாக்ஷி மனுதாக்கல் செய்தார். மனு மீதான விசாரணையில் சோனாக்ஷியை கைது செய்ய இடைக்கால தடை விதிக்கப்பட்டது. மேலும், போலீசாரின் விசாரணைக்கு சோனாக்ஷி ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணை அறிக்கையை போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து சோனாக்ஷியிடம் விசாரணை நடத்துவதற்காக உத்தரபிரதேச போலீசார் மும்பையில் உள்ள சோனாக்ஷியின் வீட்டிற்கு சென்றனர். அவர் வீட்டில் இல்லாத காரணத்தினால் வெகுநேரம் காத்திருந்து திரும்பினர். இன்று மீண்டும் சோனாக்ஷி வீட்டிற்கு விசாரணை நடத்த செல்கின்றனர்.