




தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாப்ஸ்கோ சார்பில் புதுச்சேரி, திருக்கனூர் மற்றும் காரைக்காலில் சிறப்பு அங்காடி நடத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக புதுச்சேரி, தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் தீபாவளி சிறப்பு அங்காடியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.
கடந்த காலங்களில் பாப்ஸ்கோ சிறப்பங்காடியில் மளிகை பொருட்களை ஒவ்வொரு பிரிவாக சென்று வாங்க வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கூட்ட நெரிசலும் ஏற்பட்டது.
அதனை தவிர்க்க இந்தாண்டு எண்ணெய் உள்ளிட்ட 25 வகை மளிகைப் பொருட்களை ஒரே தொகுப்பாக மானிய விலையில் வழங்கப்பட உள்ளது. இதற்காக மொத்தம் 83 ஆயிரம் தொகுப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பங்காடிக்காக தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இரண்டு ராட்சத அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் மளிகை பொருட்கள் தொகுப்பாக வழங்க உள்ளதால், ஒழுங்குமுறை விற்பனை கூட குடோன்களில் வைத்து வழங்க முதல்வர் உத்தரவிட்டார். இந்த சிறப்பு அங்காடியின் திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் சாய்.சரவணகுமார் ஆகியோர் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பு அங்காடியைத் திறந்து வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, " 25 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 800 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் வகையில் மலிவு விலையில் பட்டாசு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மேலும் கூட்டுறவுத்துறை கான்பெட் மூலமாக சில இடங்களில் குறைந்த விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கு உரிய பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும். மக்கள் குறைகளை கேட்டு அதை தீர்க்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் அதன்படி மக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.