இந்தியப் பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ) நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலண்டு வரை உள்ள 9 மாதங்களில் ரூ. 7,951 கோடி அளவிற்கு மோசடி புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ரூ. 723.06 கோடி மதிப்பிலான 669 புகார்களும், இரண்டாம் காலாண்டான ஜுலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ. 4,832.42 கோடி மதிப்பிலான 660 புகார்களும், மூன்றாம் காலாண்டான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ. 2,395.81 கோடி மதிப்பிலான 556 வழக்குகளும் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி வழக்குகளில் பெரும்பாலானவை வாராக் கடன் சம்மந்தப்பட்டவை என்றும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. கடந்த வருடம் பஞ்சாப் நேஷனல் வங்கி 2 பில்லியன் அமெரிக்க டாலர் மோசடி நடந்ததாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்.பி.ஐ. வங்கி தற்போது அறிவித்திருக்கும் இந்த ரூ. 7,951 கோடி என்பதை அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிட்டால் 1.12 பில்லியன் அமெரிக்க டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.