சாவர்க்கரின் பேரனான சத்யாகி சாவர்க்கர் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து சென்றிருந்த போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது சாவர்க்கர் பற்றி பொய்யான அவதூறு கருத்துகளையும், குற்றச்சாட்டுகளையும் தெரிவித்திருந்தார். அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என தெரிந்தும் வேண்டுமென்றே இந்த குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். சாவர்க்கரின் நன்மதிப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் ராகுலின் நோக்கமாகும். இது எனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உட்பட பலருக்கு மன வேதனையை அளித்துள்ளது.
சாவர்க்கர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் சமூகத்தில் அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. சாவர்க்கர் உட்பட பலர் மீது அவதூறு கருத்துகளைத் தெரிவிப்பது ராகுல் காந்திக்கு வாடிக்கையாக உள்ளது. எனவே, ராகுல் காந்தியிடம் சட்டப்படி விசாரணை நடத்த வேண்டும். மேலும், அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். அவரிடமிருந்து நஷ்டஈடு பெற்றுத் தர வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.