சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ஆம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட இருக்கிறார்.
இந்நிலையில் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை வளாகத்தின் வாயிலில் அவரது ஆதரவாளர்கள், அமமுகவினர் அதிகளவில் குவிந்துள்ளனர். பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படக்கூடிய சசிகலா மருத்துவர்களின் ஆலோசனைப்படி பெங்களூரிலேயே 10 நாட்கள் வரை ஓய்வெடுக்க வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. அவர் தங்குவதற்காக ஜெய் நகர், ராஜாஜி நகர், ஆனேக்கால் உள்ளிட்ட மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மூன்று இடத்தில் ஏதேனும் ஒரு இடத்தில் அவர் தங்குவார் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேபோல் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு வேறு ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ கண்காணிப்பில் தங்குவதற்கான வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
இன்று காலை முதற்கொண்டே கர்நாடக போலீசார் மருத்துவமனை முன்பாக தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விக்டோரியா அரசு மருத்துவமனையில் உள்ள எட்டு வாயில்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டிருக்கிறது.
சசிகலா டிஸ்சார்ஜ் குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், ''சசிகலா இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளது. 7 நாட்களிலிருந்து 10 நாட்கள் வரை தனிமைப்படுத்திக் கொள்ள அவரிடம் வலியுறுத்தியுள்ளோம். கர்நாடகாவில் பத்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. தமிழகத்தில் எவ்வாறு உள்ளது என்பது தெரியவில்லை'' என்றார்.