மாநிலங்களவை எம்.பி.யாக பதவிவகித்த காலத்தில் தனக்கு வழங்கப்பட்ட மொத்த வருமானத்தையும் சச்சின் தெண்டுல்கர் நன்கொடையாக வழங்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், உலக கிரிக்கெட் ஜாம்பவான்களில் முன்னோடியுமான சச்சின் தெண்டுல்கர் மாநிலங்களவை உறுப்பினராக 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், தெண்டுல்கரின் பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில், அவருக்கு இதர படி உட்பட வழங்கப்பட்ட மொத்த வருமானம் ரூ.90 லட்சத்தையும் நன்கொடையாக வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘சச்சின் தெண்டுல்கரின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தாமாக முன்வந்து இதுபோன்ற செயல்பாடுகளில் சிலர் ஈடுபடுவதன் மூலம், தேவைப்படுவோருக்கு உதவி சரியான நேரத்தில் சென்றடைகிறது’ என பிரதமர் அலுவலகம் சச்சின் தெண்டுல்கருக்கு பாராட்டு தெரிவித்துள்ளது.
சச்சின் தனது ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மாநிலங்களவை கூட்டத்தொடர்களில் 7.3% மட்டுமே கலந்துகொண்டுள்ளார். நாடாளுமன்ற தகவலின்படி, 400 கூட்டங்களில் 22ல் மட்டுமே அவர் கலந்துகொண்டார். 22 முறை கேள்வியெழுப்பியுள்ளார். ஒரு மசோதா கூட அவர் தாக்கல் செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.