சபரிமலைக்கு நடிகர்களின் படங்களுடன் வரும் பக்தர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மகர பூஜைக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. இதன் காரணமாக கோயிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் பக்தர்களில் சிலர் சினிமா நடிகர்களின் படங்களைக் கொண்ட பதாகைகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளனர். கோவிலில் வைத்து புகைப்படங்களை எடுத்து அதனை இணையத்திலும் பதிவேற்றி வருகின்றனர்.
இதனால் கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவர் சபரிமலைக்கு சினிமா நடிகர்களின் படங்களுடன் வருபவர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கேரள உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார். இவ்விவகாரத்தை நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அதில், சினிமா நடிகர்கள், அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் மற்றும் பதாகைகளுடன் வரும் பக்தர்களை கோவிலில் அனுமதிக்கக் கூடாது என்றும், அவர்களுக்கு தரிசனம் செய்ய தடைவிதிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. மேலும், கோவிலில் ட்ரம்ஸ் உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கக் கூடாது பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதை உறுதி செய்யவேண்டும் எனவும் கூறியுள்ளது.