டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்தியா கூட்டணியில் இருக்கும் ஆத்மி கட்சி, காங்கிரஸுடன் இருந்து விலகி தனித்து போட்டியிட இருக்கிறது. அதனால், அங்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க என மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா ஆகிய 3 கட்சிகள், டெல்லி தேர்தலுக்காக ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்த தேர்தலில் வெற்றி பெற, அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. சீலம்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, “டெல்லியை சுத்தம் செய்வேன், ஊழலை ஒழிப்பேன், தலைநகரை பாரிஸாக மாற்றுவேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். உண்மையில் என்ன நடந்தது? மாசு மற்றும் பணவீக்கம் அதிகரித்து வருவதால் ஒருவர் நகர முடியாமல் உள்ளனர். காங்கிரஸ் செய்ததை அரவிந்த் கெஜ்ரிவாலோ அல்லது பா.ஜ.க.வோ செய்ய முடியாது. டெல்லியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் டெல்லியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்று பேசினார்.
இதற்கு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘ராகுல் காந்தி இன்று டெல்லி வந்தார். அவர் என்னை மிகவும் துஷ்பிரயோகம் செய்தார். ஆனால் அவரது விமர்சனம் குறித்து நான் கருத்து தெரிவிக்க மாட்டேன். அவர் காங்கிரசை காப்பாற்ற போராடுகிறார். நான் நாட்டை காப்பாற்ற.போராடுகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.