மேற்கு வங்க மாநிலம், உத்தர தினாஜ்பூர் மாவட்டம், ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சலிதா பர்மன். இவரது கணவர் பரிதோஷுக்கு (51) கட்டிட விபத்தால் காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த தனது கணவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக சலிதா, தனது கணவரை அழைத்துக் கொண்டு ஆட்டோ மூலம் ராய்கஞ்ச் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
மருத்துவமனையில் பணிபுரிந்த பாதுகாப்பு ஊழியர்கள், அவர்கள் வந்த ஆட்டோவை வளாகத்திலேயே நிறுத்துமாறு வற்புறுத்தியுள்ளனர். நடக்க முடியாத பரிதோஷுக்கு, மருத்துவமனையில் சக்கர நாற்காலி வழங்கப்படாததால் வேறு வழியின்றி, சலிதா தனது கணவரை முதுகில் சுமந்து கொண்டு ஓ.பி பிரிவுக்குச் சென்றுள்ளார். மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு, பரிதோஷுக்கு மற்றொரு கட்டிடத்தில் சிடி ஸ்கேன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டது.
அப்போதும் சக்கர நாற்காலி கிடைக்காததால், சலிதா தனது கணவரை மீண்டும் தனது முதுகில் சுமந்து கொண்டு மற்றொரு கட்டிடத்திற்கு சென்றுள்ளார். சலிதா தனது கணவரை சுமந்து செல்லும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும், அரசு நடத்தும் மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கூட இல்லை என பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.