Skip to main content

ராமர் கோயில் திறப்பு விழா! - அத்வானிக்கு அனுமதி மறுப்பு?

Published on 19/12/2023 | Edited on 19/12/2023
Rama temple opening ceremony! Denial of permission to Advani?

உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. இது தற்போது நிறைவடையும் தறுவாயில் உள்ளது. இந்தக் கோயில் வரும் ஜனவரி மாதம் 22ம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்றுவரும் நிலையில், கோயில் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் மொத்தம் 7 ஆயிரம் சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. 

அதன்படி அயோத்தி கோயில் திறப்புக்கு நாட்டின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானி மற்றும் ரத்தன் டாடா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரைப் பிரபலங்களில், அமிதாப் பச்சன், அக்‌ஷய் குமார், டி.டி. சேனலில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராமர் வேடத்தில் நடித்த அருண் கோவில், அதே தொடரில் சீதையாக நடித்த தீபிகா சிக்கில்யா மற்றும் நடிகை கங்கனா ரனாவத் ஆகியோருக்கும், முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்களான சச்சின், விராட் கோலி உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், ராமர் கோயில் அமைவதற்கு ஆதரவாக இருந்த பத்திரிகையாளர்களுக்கும், ராமர் கோயிலுக்காக பாடுபட்ட 50 கரசேவகர்களின் குடும்பத்தினருக்கும், குறைந்தபட்சம் 50 நாடுகளில் இருந்து தலா ஒரு பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், மதத் தலைவர்கள், சன்யாசிகள், மத போதகர்கள், சங்கராச்சார்யர்கள், முன்னாள் அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள், வழக்கறிஞர்கள், அறிவியல் அறிஞர்கள், கவிஞர்கள், இசைக் கலைஞர்கள், பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் பெற்றவர்கள் உள்ளிட்டோருக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்த 7,000 சிறப்பு விருந்தினர்களில், 4,000 அழைப்புகள் நாடு முழுக்க இருக்கும் மதத் தலைவர்களும், 3,000 அழைப்புகள் வி.வி.ஐ.பி.க்களும் அடங்குவர். 

Rama temple opening ceremony! Denial of permission to Advani?

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களான எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவருக்கும் கோயில் அறக்கட்டளை அழைப்பு விடவில்லை. இந்தச் செய்தி வெளியானதும் இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. முன்னாள் துணை பிரதமரான அத்வானி, குஜராத் மாநிலம் சோம்நாத் முதல் உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தி வரை 1990ல் ராம ஜென்ம பூமியின் ரத யாத்திரையை நடத்தியவர். அப்போது வட இந்தியாவின் பல நகரங்களில் மதக் கலவரங்கள் நடைபெற்றன.

இன்று கோயில் அறக்கட்டளை சார்பில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஆகிய இருவரும் வயது மூப்பு, கடுங்குளிர் காரணமாக வரவேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்திருந்தது. இது இன்னும் பெரும் பேசுபொருளாக மாறியது. 

அதனைத் தொடர்ந்து விஷ்வ இந்து பரிக்‌ஷித் அமைப்பு தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில், “ஜனவரி மாதம் 22ம் தேதி 2024ம் ஆண்டு நடைபெறவிருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க எல்.கே. அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகிய இருவரையும் அழைத்துள்ளோம். அவர்கள் இருவருமே வருவதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்