போதைப்பொருள்களைக் கடத்துவதற்கு பதிலாக தங்கத்தைக் கடத்துங்கள் என்அ பா.ஜ.க. எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் தேவாசி எனும் இனத்தைச் சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். ராஜஸ்தான் சட்டமன்றத்தில் இந்த தேவாசி இன மக்கள்தான் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் அதிகம் சிக்குவதாகவும், அதிகளவிலான வழக்குகள் அவர்கள் மீது பதியப்பட்டிருப்பதாகவும் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
ராஜஸ்தான் மாநிலம் பிலாரா தொகுதியின் எம்.எல்.ஏ.வான் அர்ஜூன் லால் கார்க், சமீபத்தில் தேசாசி இன மக்களின் மத்தியில் பேசினார். அப்போது அவர், ‘உங்கள் இனத்து மக்கள்தான் சட்டவிரோத செயல்களில் அதிகம் ஈடுபடுகிறீர்கள். அதேபோல், போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் அதிகளவு உங்கள் இனத்து மக்கள் மீதுதான் பதியப்பட்டுள்ளது. அப்படி நீங்கள் கடத்தல் தொழிலில்தான் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறீர்கள் என்றால், போதைப்பொருளுக்கு பதிலாக தங்கத்தைக் கடத்துங்கள். போதைப்பொருள் கடத்தினால் ஜாமீன் கிடையாது. ஆனால், தங்கத்தைக் கடத்தினால் ஜாமின் உண்டு. அதேபோல், தங்கம் கடத்துபவன் என்ற அந்தஸ்தும் உங்களுக்கு கிடைக்கும்’ என மக்களை சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தும் விதமாக பேசியுள்ளார். இவரது இந்த கருத்து பலராலும் கண்டிக்கப்பட்டுள்ளது.