இந்த வருடத்திற்கான நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 20 ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளில் இருந்து தற்போது வரை முழுவதுமாக நடைபெறவில்லை. நாடாளுமன்ற இரு அவைகளிலும், எதிர்க்கட்சிகள் சார்பில், மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து உடனே விவாதிக்க வேண்டும், மணிப்பூர் விவகாரம் குறித்துப் பிரதமர் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இரு அவைகளிலும் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வருவதால், கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவைகள் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே எதிர்க்கட்சிகள் அனைவரும் மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என்று கூறி நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் இன்றும் நாளையும் விவாதிக்கப்படவுள்ளன. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள்(10.8.2023) பிரதமர் மோடி விளக்கமளிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது மக்களவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. விவாதத்தை காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் தொடங்கிப் பேசினார். ஆனால் ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கேள்வி எழுப்பினார். பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை எனக் காங்கிரஸ் எம்.பி கோகோய் பதில் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மூன்று கேள்விகளை முன் வைத்து விவாதத்தைத் தொடங்கியுள்ளார். பிரதமர் மோடி ஏன் மணிப்பூர் செல்லவில்லை, மணிப்பூர் விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை; அப்படி 90 நாட்கள் கழித்துப் பேசிய பிரதமர் 30 வினாடிகள் மட்டுமே பேசியிருந்தார், மணிப்பூர் முதல்வரை ஏன் மத்திய அரசு காப்பாற்றி வருகிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.