கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பெற்றோர் மற்றும் உறவினர்களை இழந்த சகோதரிகளுக்கு, உறுதியளித்தபடி புதிய வீடு ஒன்றை வழங்கியுள்ளார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தி மூன்று நாள் சுற்றுப்பயணமாக திங்கள்கிழமை அன்று தனது வயநாடு தொகுதிக்குச் சென்றுள்ளார். சிறப்பு விமானம் மூலம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பிறகு, மலப்புரம் கலெக்டரேட்டில் வாராந்திர கரோனா மறுஆய்வுக் கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு கடந்த ஆண்டு கேரளாவில் பெய்த பலத்த மழையினால் காவலப்பாரா மலைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட சகோதரிகளான காவியா மற்றும் கார்த்திகா ஆகியோரை ராகுல் காந்தி சந்தித்தார்.
கடந்த ஆண்டு 59 பேரை பலிகொண்ட காவலப்பாரா நிலச்சரிவில் காவியா மற்றும் கார்திகா ஆகியோர் தங்களது குடும்பம், உறவினர்கள், வீடு ஆகியவற்றை இழந்தனர். காவ்யாவும் கார்த்திகாவும் கல்வி நிலைய விடுதியில் தங்கியிருந்து படித்து வந்ததால், அவர்கள் இருவரும் இந்த விபத்திலிருந்து உயிர் பிழைத்தனர். இந்த விபத்து நடந்தபோது, பாதிக்கப்பட்ட சகோதரிகளைச் சந்தித்த ராகுல் காந்தி, விரைவில் அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி, புதிதாகக் கட்டிமுடிக்கப்பட்ட வீட்டின் சாவியை ராகுல் காந்தி இன்று அவர்களிடம் அளித்தார்.