புதுச்சேரி மாநிலம் நெட்டப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் தற்கொலை வழக்கில் 'மக்கள் உரிமைக் கூட்டமைப்பு' சார்பில் அளிக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புதுச்சேரி டி.ஜி.பி.க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் கோ.சுகுமாரன், கடந்த 11.12.2019 அன்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு அனுப்பிய புகாரில், 'நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் கடந்த 21.11.2019 அன்று காவல் நிலையம் அருகேயுள்ள கட்டிடத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் உதவி ஆய்வாளர் விபல்குமார் காவல்துறை உயர் அதிகாரிகளின் தொடர் அச்சுறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறை உயர் அதிகாரிகள் மீதே குற்றச்சாட்டு உள்ளதால் இவ்வழக்கை புதுச்சேரி போலீசார் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே, இவ்வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.
இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். புதுச்சேரி அரசும், காவல்துறையும் காவல் ஆய்வாளர் கலைச்செல்வன் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்துள்ளனர்.
அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை மிரட்டி வருவதால் விசாரணை முடியும் வரையில் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ1 கோடி இழப்பீடு, அரசு அறிவித்துள்ளபடி அரசுப் பணியும் வழங்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மனுவினைப் பரிசீலித்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், கடந்த 13.01.2020 அன்று புதுச்சேரி டி.ஜி.பி.க்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் மனுவினை அனுப்பி வைத்து, அதன் மீது 8 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுத்துப் புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.