காலாப்பட்டுச் சிறையில் கரோனா வேகமாகப் பரவுவதால் கைதிகளை உடனே விடுவிக்க வேண்டும் என புதுச்சேரி சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இயக்கங்கள் சார்பாக வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் மொத்தம் 158 பேர் உள்ளனர். இவர்களில் 14 ஆண்டுகள் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகள் உடனுக்குடன் விடுதலை செய்யப்படுவதில்லை. இத்தகைய சூழலில் நேற்றைய தினம் காலாப்பட்டுச் சிறையில் 3 கைதிகள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சிறைச்சாலையில் தற்போது வரை மொத்தம் 5 கைதிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். காலாப்பட்டு மத்தியச் சிறையில் கடுமையான மன உளைச்சலில் இருந்து வரும் சிறைக் கைதிகளைப் புதுச்சேரி அரசு விடுவிக்காத நிலை நீடித்தால், கைதிகள் கரோனா தொற்றினால் பெருமளவில் பாதிக்கப்படுவர்.
உலகம் முழுவதும் கரோனா தொற்று காரணமாகச் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். உச்சநீதிமன்றமும் ஏற்கனவே கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது. ஆனால், புதுச்சேரி அரசு இத்தகைய வழிமுறைகளைப் பின்பற்றாமல் சிறைக் கைதிகளை நோய்த் தொற்றுக்கு உள்ளாக்கி இருப்பது கண்டனத்துக்குரியது. எனவே, புதுச்சேரி அரசும், சிறைத்துறையும் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகளைப் பிணையிலோ அல்லது நீண்ட கால பரோல் விடுப்பிலோ உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளை உடனுக்குடன் விடுவித்து வருகின்றனர். அதேபோல், புதுச்சேரியிலும் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடித்த ஆயுள் தண்டனைக் கைதிகளையும் முன்விடுதலை செய்யும் வகையில் அரசாணை ஒன்றை வெளியிட வேண்டுமென சமூக, ஜனநாயக இயக்கங்கள் சார்பில் புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டறிக்கையில் மக்கள் வாழ்வுரிமை இயக்கம், திராவிடர் விடுதலைக் கழகம், மீனவர் விடுதலை வேங்கைகள், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தமிழர் களம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, இராவணன் பகுத்தறிவு இயக்கம், செம்படுகை நன்னீரகம், இலக்கிய பொழில் இலக்கிய மன்றம், புதுச்சேரி தன்னுரிமைக் கழகம், புதுச்சேரி பூர்வகுடி மக்கள் பாதுகாப்பு இயக்கம், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படை, தமிழர்களம் ஆகிய அமைப்புகளின் நிர்வாகிகள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ளனர்.