உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ஸ்ரீராம்ஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா என்ற அறக்கட்டளை அமைக்கப்பட்டு, அதன் கீழ் இந்த கோவில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த பணிகளை உத்தர பிரதேச மாநில அரசு கவனித்து வருகிறது. இந்த கோவிலின் அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இன்னும் இரண்டு மாதங்களில் கோவில் கட்டுமான பணிகள் முடிந்து அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி கோவில் திறப்பு விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ் தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் நேற்று (25-10-23) பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி இந்த விழாவில் பங்கேற்க உள்ளதாக் அறிவித்துள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் (ட்விட்டர்)பக்கத்தில் கூறியதாவது, “ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்தஷேத்ரா அதிகாரிகள் என்னை சந்தித்து ஸ்ரீராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி அயோத்திக்கு வருமாறு அழைத்தனர். நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். எனது வாழ்நாளில், இந்த வரலாற்று நிகழ்வைக் காண்பது எனது அதிர்ஷ்டம். அடுத்த ராமநவமியின் போது, ராமர் கோவிலில் பிரார்த்தனை செய்வது உலகம் முழுவதும் மகிழ்ச்சியை பரப்பும்” என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. கபில் சிபல் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “அரசியல் லாபத்திற்காக எத்தனை முறை ராமரை பயன்படுத்துவீர்கள்?. ராமர் பெயரை பயன்படுத்தும் நீங்கள், ராமரின் நற்பண்புகளை மட்டும் ஏற்றுக்கொள்ளாதது ஏன்?. அவரது வீரம், விசுவாசம், இரக்கம், அன்பு, கீழ்படிதல், மற்றும் சமநிலை. உங்களது ஆட்சியில் இந்த நற்பண்புகளை எதையும் காட்டவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.