நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (14/09/2020) கூடியது.
கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று (14/09/2020) மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் ஹெச். வசந்தகுமார் உள்ளிட்ட தலைவர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு ஒரு மணி நேரம் மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு அவை மீண்டும் கூடிய போது, தி.மு.க.வின் மக்களவை குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு நீட் விவகாரம் குறித்து பேசினார்.
அதைத் தொடர்ந்து மாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ஹரிவன்ஸ் நாராயண் சிங் வெற்றி பெற்றதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.
எம்.பி. ஹரிவன்ஸ் நாராயண் சிங், இரண்டாவது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக மாநிலங்களவை எம்.பி.க்களாக திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர்.இளங்கோ பதவியேற்றுக்கொண்டனர். திமுக எம்.பி.க்கள் மூவருக்கும் மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.