Skip to main content

வெளியான புகைப்படங்கள்; பரபரப்பான கர்நாடகா; அரசு அதிரடி உத்தரவு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

Published photographs; Busy Karnataka; Govt action order

 

கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய பெண் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளின் மோதலில் அரசு புதிய நடவடிக்கையை எடுத்துள்ளது.

 

கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது இவர் சிறை துறையில் டிஐஜியாக இருந்தார். சசிகலா சிறையில் இருந்த ஆரம்பக் காலத்தில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்ததாக சிறைத்துறை டிஜிபி மீது பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பினார். அதனைத் தொடர்ந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டு தற்போது கர்நாடக கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அதேபோல் கர்நாடகாவில் மிகவும் பிரபலமானவர் ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி சிந்தூரி. இவர் தற்போது கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறையில் ஆணையராகப் பணிபுரிந்து வருகிறார்.

 

இவர்களுக்கிடையே அடிக்கடி சமூக வலைத்தளங்களில் மோதல்கள், சண்டைகள் நடந்து வந்தன. இந்நிலையில், ரோகிணி சிந்தூரியின் தனிப்பட்ட படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ரூபா பதிவிட்டுள்ளார். அதில், “இந்த படங்களை மூன்று ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அவ்வப்போது ரோகிணி ஷேர் செய்துள்ளார். ஐஏஎஸ் சர்வீஸ் நடத்தை விதிகளின்படி இது குற்றத்திற்கு உரியது” எனத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்த்தரப்பான ரோகிணி சிந்தூரி ரூபாவின் இச்செயல்பாடு குறித்து, “மனநோய் என்பது சிகிச்சை தேவைப்படும் ஒரு தீவிரமான பிரச்சனை. பொறுப்பான பதவிகளில் இருப்பவர்கள் மனநோயால் பாதிக்கப்பட்டால் அது மிகவும் ஆபத்தானதாக மாறிவிடும்” எனத் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ், டிபி புகைப்படங்களை ஸ்க்ரீன்ஷாட் எடுத்துக்கொண்டு ரூபா வதந்திகளைக் கிளப்பி வருவதாகக் கொதித்துள்ளார் ரோகிணி.

 

இந்நிலையில், இரண்டு பெண் அதிகாரிகள் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி மோதிக் கொண்டது கர்நாடக அரசியலை பரபரப்பாக்கியது. பெண் அதிகாரிகளின் இத்தகைய செயலுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் விமர்சனங்களும் கண்டனங்களும் எழுந்த நிலையில், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளான ரூபா மற்றும் ரோகினிக்கு கர்நாடக தலைமைச் செயலாளர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

 

பொதுவெளியில் குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது என்று கர்நாடக செயலர் எச்சரித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரோகிணி மைசூரில் பணியாற்றிக் கொண்டிருந்த நிலையில், சக பெண் அதிகாரி ஷில்பா நாக் என்பவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது ஐஏஎஸ் அதிகாரி ரோகிணி மீது குற்றச்சாட்டுகளைக் கூறிய ரூபா ஐபிஎஸ் மற்றும் அதற்கு பதில் அறிக்கை வெளியிட்ட ரோகிணி ஐஏஎஸ் இருவரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்