மக்களவைத் தேர்தல், நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கவிருக்கிறது தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தல் நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் பதியப்படும் வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழகம், மணிப்பூர், சிக்கிம் போன்ற மாநிலங்களில் நடைபெறும் மக்களவைத் தேர்தலோடு உத்தரகாண்ட் மாநிலத்திலும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. மொத்தம் 5 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில், பா.ஜ.க, காங்கிரஸ் ஆகிய அரசியல் கட்சிகள் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநிலம், ராம்நகர் பகுதியில் இன்று (13-04-24) காங்கிரஸ் சார்பாக நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், “நீங்கள் (பாஜக) எவ்வளவு காலம் காங்கிரசை குற்றம் சாட்டுவீர்கள்? கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சியில் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக முழுப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் உள்ளனர்; இப்போது அவர்கள் 400 மேல் வெற்றி பெறுவோம் என்று சொல்வதால், அவர்களுக்கு பெரும்பான்மை வேண்டும். கடந்த 75 ஆண்டுகளில் நாட்டில் எதுவும் செய்யப்படவில்லை என்று கூறுகிறார்கள்.
எதுவும் நடக்கவில்லை என்றால், உத்தரகாண்டில், ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம்கள் மற்றும் எய்ம்ஸ்கள் ஆகியவை எப்படி வந்திருக்கும்?. சந்திரயான் விண்கலம் நிலவில் தரையிறங்கி சாதனை படைத்துள்ளது. ஜவஹர்லால் நேரு இதை உருவாக்கவில்லை என்றால், இது சாத்தியமா?
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவற்றைப் பயன்படுத்தித் தலைவர்களை தங்கள் கட்சிக்குக் கொண்டு வந்து அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் அவர்கள் மும்முரமாக இருப்பதால் வேலைவாய்ப்பையும் பணவீக்கத்தையும் மறந்துவிட்டார்கள். அப்போது, தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்டதும், நன்கொடை பெற்று வியாபாரம் செய்வது குறித்து பிரச்சனை எழுந்தது. இப்போது சொல்லுங்கள் யார் ஊழல்வாதி என்று.
எனது 19 வயதில், என் தந்தையின் சிதைந்த உடலை என் தாய் முன் வைத்தபோது, நான் தியாகத்தைப் புரிந்துகொண்டேன். அவர்கள் என் குடும்பத்தாரை எவ்வளவு துஷ்பிரயோகம் செய்தாலும், என் தியாகி தந்தையை அவமதித்தாலும், எங்கள் போராட்டத்தை அவர்கள் புரிந்து கொள்ளாததால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம். எங்கள் இதயங்களில் இந்த நாட்டின் மீது நம்பிக்கையும், உண்மையான பக்தியும் இருப்பதால் நாங்கள் அமைதியாக இருக்கிறோம்” என்று கூறினார்.