அடுத்தாண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்த இந்திய அளவில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஜனதா தளம் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். ‘இந்தியா’ (INDIA) எனப் பெயரிடப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாட்னா, பெங்களூரூ என மாநிலத்தின் அடுத்தடுத்த இடங்களில் பொதுக்கூட்டங்களை நடத்தித் தங்களது ஆதரவைப் பெருக்கி வருகிறது. ஆனால் ‘இந்தியா’ கூட்டணியைப் பிரதமர் மோடியும், பாஜகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், பீகார் ஊடகங்கள் மட்டுமே பீகார் முதல்வரான நிதிஷ்குமாரைப் பற்றி பேசி வருகின்றன என்று அரசியல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “பீகார் மாநிலத்தின் முதல்வரான நிதிஷ்குமாரின் சொந்த மாநிலமே மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியின் மிகப்பெரிய கட்சிகள் வரிசையில் முதலில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதற்கு அடுத்ததாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதனை தொடர்ந்து திமுக இருக்கிறது. அவர்கள் எல்லாம், அவர்கள் ஆளும் மாநிலங்களில் 20 முதல் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் மாநிலத்தை வெற்றி பெற செய்யலாம்.
ஆனால், நிதிஷ்குமாரின் சொந்த மாநிலமான பீகாரில், அவர் கால் ஊன்றுவதற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை. அவருக்கு கட்சியோ அல்லது இமேஜோ இல்லை. பீகார் மாநிலத்தில் உள்ள ஊடகங்கள் மட்டும் தான் அவரைப் பற்றி பேசி வருகின்றன. அவர் மற்ற மாநிலத்துக்கு சென்றால் அவரைப் பற்றி யாரும் பேசப் போவதில்லை” என்று கூறினார்.