கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், முன்களப் பணியாளர்களுக்குக் கரோனா தடுப்பூசி போடப்படும் திட்டமானது முதற்கட்டமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்றிலிருந்து (01.03.2021) 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், இன்று காலை பிரதமர் மோடி, டெல்லி எய்ம்ஸில் கோவாக்சின் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். அதனையடுத்து இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். அதேபோல் ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவும் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
பிரதமரை தொடர்ந்து மத்திய அமைச்சரான ஜிதேந்திர சிங்கும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். மேலும் பீகார் முதல்வர் நிதிஸ் குமார், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஆகியோரும் இன்று கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். மத்திய அமைச்சர்கள் நாளை தடுப்பூசி செலுத்திக்கொள்ள உள்ளனர். மத்திய அமைச்சர்கள் கட்டணம் செலுத்தி தடுப்பூசி செலுத்திக் கொள்ளவுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.